web analytics
மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய ஜல் சக்தித் துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீலிடம் கடிதம் அளித்த அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த்
மேகதாது அணைத் திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என ஒன்றிய ஜல் சக்தித் துறை அமைச்சரிடம் கடிதம் அளித்த அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, இன்று (18.11.2026) புதன்கிழமை, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. புஸ்ஸி என். ஆனந்த் அவர்கள், கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும், ஒன்றிய ஜல் சக்தித் துறை அமைச்சர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி டெல்லியில் ஒன்றிய அமைச்சரை நேரில் சந்தித்துக் கடிதம் அளித்தார்.

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு முன்மொழிந்துள்ள மேகதாது அணைத் திட்டம், காவிரி நடுவர் மன்றத்தின் 05.02.2007 தேதியிட்ட இறுதித் தீர்ப்புக்கும், மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் 16.02.2018 தேதியிட்ட தீர்ப்புக்கும் முரணானது. மேலும், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழ்நாட்டின் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும்.

மேகதாது திட்டத்தைச் செயல்படுத்த கர்நாடக அரசு தொடர்ந்து முயற்சித்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு பல்வேறு சட்டரீதியான மற்றும் நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 27.05.2026 அன்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

மேலும், மேகதாது திட்டத்திற்கு எந்தவிதமான அனுமதியும் வழங்கக் கூடாது என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு இந்தியப் பிரதமரிடம் நேரிலும், கடிதங்கள் வாயிலாகவும் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார். 19.06.2026 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் மேகதாது திட்டத்திற்கு ஒன்றிய அரசு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒன்றிய அரசின் ஜல் சக்தி அமைச்சகம் 2025 டிசம்பரில் வெளியிட்ட காவிரி நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான வழிகாட்டுதல்களை எதிர்த்து, தமிழ்நாடு அரசு மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில் 03.08.2026 அன்று ரிட் மனுவையும் தாக்கல் செய்துள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை அல்லது நீரைத் திசைதிருப்பும் திட்டங்களைச் செயல்படுத்த, காவிரிப் படுகையில் உள்ள அனைத்து மாநிலங்களின் உரிய சட்டப்பூர்வ ஒப்புதலும் அவசியம் என்பதைத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், கர்நாடக அரசு மேகதாது திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) ஒன்றிய அரசின் ஒப்புதலுக்காக முன்னெடுத்துச் செல்ல முயற்சித்து வருவது கவலைக்குரியதாகும்.

இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் அவர்கள், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா மற்றும் பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் ஆகியோருடன் இணைந்து, ஒன்றிய ஜல் சக்தித் துறை அமைச்சர் திரு. சி.ஆர். பாட்டீல் அவர்களை நேரில் சந்தித்துக் கடிதம் அளித்தார்.

அக்கடிதத்தில் பின்வரும் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன:

1. கூட்டாட்சித் தத்துவத்தையும் மாநிலங்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை (DPR), ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகமும் மத்திய நீர் ஆணையமும் (CWC) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது.

2. காவிரி ஆறு மற்றும் அதன் துணை ஆறுகளில் புதிய நீர்த்தேக்கங்கள் அமைத்தல் அல்லது நீரைத் திசைதிருப்புதல் உள்ளிட்ட எந்தவொரு புதிய திட்டத்தையும், காவிரிப் படுகையில் உள்ள அனைத்து மாநிலங்களின் சட்டப்பூர்வ ஒப்புதல் மற்றும் இசைவு இல்லாமல் கர்நாடக அரசு மேற்கொள்ளக் கூடாது என அறிவுறுத்த வேண்டும்.

3. மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் உரிமைகள் மற்றும் கூட்டாட்சி நடைமுறைகளைப் பாதுகாக்கும் வகையில், உரிய சட்ட விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக ஒன்றிய ஜல் சக்தித் துறை அமைச்சர் மற்றும் மத்திய நீர் ஆணையத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கி, விரிவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் கேட்டுக்கொண்டார்.

Bussy Anand