
விழுப்புரம்: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாணவர்களின் கல்வி மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கடந்த 05.11.2026 வியாழக்கிழமை அன்று, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், பகண்டை அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் புதிதாகக் கட்டப்பட்ட 6 வகுப்பறைகளைக் கொண்ட பள்ளிக் கட்டடத்தை மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. புஸ்ஸி என். ஆனந்த் அவர்கள் திறந்து வைத்தார்.
அப்போது, பள்ளியில் உள்ள கழிவறைகள் முறையாகப் பராமரிக்கப்படாமல் இருப்பதை அறிந்த அமைச்சர் அவர்கள், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. A. ராஜ்மோகன் அவர்களின் கவனத்திற்கு இப்பிரச்சினையைக் கொண்டு சென்றார். தொடர்ந்து, மாணவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து, கழிவறைகளை விரைவில் சீரமைத்துத் தருவதாக உறுதியளித்தார்.
அமைச்சரின் உடனடி நடவடிக்கையைத் தொடர்ந்து, தற்போது பள்ளியின் கழிவறைகள் முழுமையாகச் சீரமைக்கப்பட்டுள்ளன. கழிவறைகளுக்குப் புதிய கதவுகள் பொருத்தப்பட்டுள்ளதுடன், புதிய குழாய் இணைப்புகள் அமைக்கப்பட்டு, சிறுநீர் கழிப்பிட வசதிகளும் முறையாகச் சீரமைக்கப்பட்டுள்ளன.
