web analytics
பகண்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடத்தைத் திறந்து வைத்த அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த்
பகண்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடத்தைத் திறந்து வைத்த அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த்.

விழுப்புரம்: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, 05.11.2026 வியாழக்கிழமை இன்று, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. புஸ்ஸி என். ஆனந்த் அவர்கள், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், பகண்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 6 வகுப்பறைகளைக் கொண்ட பள்ளிக் கட்டடத்தைத் திறந்து வைத்தார்.

பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 48 இலட்சத்து 44 ஆயிரம் மதிப்பீட்டில் இப்புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியின்போது மாணவர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் அவர்களிடம், தங்களது பகுதிகளில் இருந்து பள்ளிக்கு வந்து செல்வதற்குப் போதிய பேருந்து வசதி இல்லாததால் கல்வி கற்பதில் சிரமம் ஏற்படுவதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

மாணவர்களின் கோரிக்கையைக் கேட்டறிந்த அமைச்சர் அவர்கள், உடனடியாக போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. A. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, மாணவர்களையே நேரடியாகப் பேசச் செய்தார். மாணவர்களின் தேவைகளைக் கேட்டறிந்த போக்குவரத்துத் துறை அமைச்சர், விரைவில் அப்பகுதிக்குப் பேருந்து சேவை ஏற்படுத்தித் தரப்படும் என உறுதியளித்தார்.

மேலும், பள்ளியில் உள்ள கழிவறைகள் முறையாகப் பராமரிக்கப்படாததால் மாணவர்கள் சிரமப்படுவதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, அமைச்சர் அவர்கள் நேரில் சென்று கழிவறைகளைப் பார்வையிட்டார். அவை சேதமடைந்து மோசமான நிலையில் இருப்பதைக் கண்ட அவர், மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை முறையாகப் பராமரிக்காதது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களை வீடியோ அழைப்பின் மூலம் தொடர்புகொண்டு, கழிவறைகளின் தற்போதைய நிலையைக் காண்பித்து அவற்றைச் சீரமைப்பதன் அவசரத் தேவையை எடுத்துரைத்தார். பள்ளிக் கழிவறைகளை உடனடியாகச் சுத்தம் செய்து, மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாணவர்களுக்கு உறுதியளித்தார்.

புதிய பள்ளிக் கட்டடத்தைத் திறந்து வைத்ததுடன், மாணவர்களின் அன்றாடத் தேவைகளையும் நேரில் கேட்டறிந்து, பேருந்து வசதி மற்றும் கழிவறைப் பராமரிப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களுடன் உடனடியாகத் தொடர்புகொண்டு நடவடிக்கை மேற்கொண்ட அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் அவர்களின் அணுகுமுறை மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றது.

இந்நிகழ்வில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் திரு. கே.ஜே. ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு. ஆனந்த் குமார் சிங், இ.ஆ.ப., துணை ஆட்சியர் திரு. ஆகாஷ், இ.ஆ.ப., விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. சி. சிவக்குமார் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Bussy Anand