
விழுப்புரம்: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, 05.11.2026 வியாழக்கிழமை அன்று, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. புஸ்ஸி என். ஆனந்த் அவர்கள், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கக்கனூர் ஊராட்சியில், காணை ஊராட்சி ஒன்றியத்தில், அயோத்திதாசர் பண்டிதர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.16.55 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டடத்தைத் திறந்து வைத்தார்.
அங்கன்வாடி மையத்திற்கு வருகை தந்த அமைச்சரை அங்கிருந்த மழலைக் குழந்தைகள் ரோஜா மலர்களைக் கொடுத்து அன்புடன் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து, அமைச்சர் அவர்கள் குழந்தைகளுக்குப் பரிசுப் பொருட்களை வழங்கி மகிழ்வித்தார்.
குழந்தைகளுக்குப் பாதுகாப்பான மற்றும் தரமான முன்பருவக் கல்வி வழங்குவதோடு, அவர்களின் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் அங்கன்வாடி மையங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. அந்த வகையில், புதிதாகத் திறக்கப்பட்டுள்ள இந்த அங்கன்வாடி மையக் கட்டடம் கக்கனூர் பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்குப் பெரிதும் பயனுள்ளதாக அமையும்.
இந்நிகழ்வில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் திரு. கே.ஜே. ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு. ஆனந்த் குமார் சிங், இ.ஆ.ப., துணை ஆட்சியர் திரு. ஆகாஷ், இ.ஆ.ப., விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. சி. சிவக்குமார் மற்றும் அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
