
திருச்சி: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, திருச்சியில் 12.11.2026 மற்றும் 13.11.2026 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகத்தின் ஜல் ஜீவன் மிஷன் மண்டல மாநாட்டில், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. புஸ்ஸி என். ஆனந்த் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இம்மாநாட்டில் மாண்புமிகு ஒன்றிய ஜல் சக்தித் துறை அமைச்சர் திரு. சி.ஆர். பாட்டீல், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் புஸ்ஸி என். ஆனந்த் அவர்கள், தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பாதுகாக்கப்பட்ட, தரமான குடிநீரை வழங்குவதில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு சிறப்புக் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் உள்ள 1.25 கோடி ஊரக வீடுகளுக்குக் குடிநீர் வழங்கும் நோக்கில், 45 புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள், 56 கூட்டுக் குடிநீர்த் திட்டங்களின் மறுசீரமைப்புப் பணிகள் மற்றும் 21,258 தனி கிராமக் குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் சுமார் 1.86 கோடி மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
இத்திட்டங்களுக்காக ரூ.18,123 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒன்றிய அரசின் பங்காக ரூ.9,025 கோடியும், தமிழ்நாடு அரசின் பங்காக ரூ.9,097 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 1.25 கோடி ஊரக வீடுகளில் இதுவரை 1.15 கோடி வீடுகளுக்குக் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 9,398 ஊராட்சிகளில் அனைத்து வீடுகளுக்கும் 100 சதவீதம் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கும் ஊராட்சிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
ஊரகப் பகுதிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மூலம், நபர் ஒருவருக்கு நாளொன்றுக்கு 55 லிட்டர் வீதம் குளோரின் கலந்த சுத்தமான குடிநீர் தொடர்ந்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடிநீரின் தரத்தை உறுதி செய்யும் வகையில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மாதத்திற்கு இருமுறை சுத்தம் செய்யப்படுவதுடன், மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாயிலாக குடிநீர் ஆதாரங்களின் தரமும் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
மேலும், குடிநீர் விநியோகத்தைத் தொடர்ந்து கண்காணித்து, பொதுமக்களின் குறைகளை விரைந்து நிவர்த்தி செய்யும் வகையில், ‘ஊராட்சி மணி’ கட்டணமில்லா தொலைபேசி சேவை (155340), ‘புனல்’ இணையதளம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் விநியோகக் கண்காணிப்புச் செயலி ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் எடுத்துரைத்தார்.
ஜல் ஜீவன் மிஷன் திட்டம் 2028 டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு ஒன்றிய ஜல் சக்தித் துறை அமைச்சர் ஆகியோர் முன்னிலையில் 02.06.2026 அன்று கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு வீட்டிற்கும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் போதுமான அளவில் பாதுகாப்பான மற்றும் தரமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்வதே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நோக்கம் என அமைச்சர் தனது உரையில் தெரிவித்தார்.
