
திருச்சி: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, 12.11.2026 வியாழக்கிழமை அன்று, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. புஸ்ஸி என். ஆனந்த் அவர்கள், திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கொம்பு மேலணையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கடந்த 2022ஆம் ஆண்டு காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக, முக்கொம்பு மேலணையில் அமைந்துள்ள காவிரி கதவணை பலத்த சேதமடைந்தது. இதனைச் சீரமைக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, 2026–2027ஆம் ஆண்டிற்கான நீர்வளத்துறை மானியக் கோரிக்கையின்போது, முக்கொம்பு மேலணையில் சேதமடைந்துள்ள காவிரி கதவணையை ரூ.126 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று முக்கொம்பு மேலணைக்கு நேரில் சென்ற அமைச்சர் அவர்கள், வெள்ளப்பெருக்கின்போது சேதமடைந்த காவிரி கதவணையைப் பார்வையிட்டு, அதன் தற்போதைய நிலை மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய புனரமைப்புப் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்தார்.
மேலும், காவிரி கதவணையைப் புனரமைக்கும் பணிகளை விரைந்து தொடங்கும் வகையில், இன்னும் 15 தினங்களுக்குள் உரிய அரசாணையைப் பெற்று, பணிகளைத் தொடங்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.
காவிரி ஆற்றின் நீர்மேலாண்மை, அணையின் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, காவிரி கதவணை புனரமைப்புப் பணிகளை விரைந்து செயல்படுத்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த ஆய்வின்போது, மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் திரு. ரா. கதிரவன், நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
