
சென்னை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, 13.11.2026 வெள்ளிக்கிழமை அன்று, மாண்புமிகு தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு. புஸ்ஸி என். ஆனந்த் அவர்கள், தியாகராய நகர் CIT நகர் பகுதியில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முழுவதும் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மழைநீர் சேகரிப்பு இயக்கத்தைத் தொடங்கி வைத்துள்ளார். அதன் ஒரு பகுதியாக, தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதியில் முதற்கட்டமாக 25 விளையாட்டு மைதானங்களில் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் அமைக்கப்பட உள்ளன.
சுமார் 15 அடி ஆழம் வரை அமைக்கப்படவுள்ள இத்தொட்டிகள் மூலம் மழைநீரைச் சேமித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மழைநீரைச் சேமித்து நிலத்தடி நீர்வளத்தைப் பாதுகாப்பதுடன், எதிர்கால குடிநீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் இத்திட்டம் பெரிதும் உதவும்.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அப்பகுதி மக்களைச் சந்தித்த அமைச்சர் அவர்களிடம், CIT நகர் விளையாட்டு மைதானத்தில் போதிய மின்விளக்கு வசதிகள் ஏற்படுத்தித் தரவும், மைதானத்தில் குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்கவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
பொதுமக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த அமைச்சர் அவர்கள், அவற்றை விரைவில் சரிசெய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. A. விஜய் அன்பன் கல்லாணை, சென்னை பெருநகர மாநகராட்சி அரசு அலுவலர்கள், சென்னை தெற்கு (வடக்கு) மாவட்டக் கழகச் செயலாளர் திரு. K. அப்புனு (எ) வேல்முருகன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
